Friday, March 11, 2016

தினம் ஒரு பாசுரம் - 71

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு என்று,

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்,

மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே,

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


---திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இன்று திருவேங்கட த்ரிவிக்ரமப் பாசுரம் ஒன்று. பொருட்சுவையில் அலாதியான ஒன்றும் கூட



பொழிப்புரை:

எந்நாளே நாம் - எப்போது நாம்

மண்ணளந்த - இந்த பூவுலகை, ( அந்த விண்ணுலகையும் தாவி ) அளந்த

இணைத்தாமரைகள் - (திருமாலின்) இரு திருவடிகளையும்

காண்பதற்கு என்று - காண்பதற்குரிய நாள் (எப்போது  அமையும்) என

எந்நாளும் நின்று - ஒரு நாளும் விடாமல், நின்ற வண்ணம்

இனம் இனமாய் - பெருங்கூட்டமாய்

இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி - வானவர்கள் துதி செய்து, பரம பக்தியுடன் தொழுது

மெய்ந் நா மனத்தால் -  உடல், நா, உள்ளம் என்ற மூன்றையும் கொண்டு

வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே - ஆராதிக்கும் திருமலையில் எழுந்தருளியுள்ள கோவிந்தனே

மெய்ந் நான் எய்தி   - மெய் நிலையை நான் அடைந்து

எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? -  உன் திருவடிக் கீழ் அடியவனான நான் சேர்ந்து அமையும் நாள் என்றைக்கோ?

பாசுரக்குறிப்புகள்:

திருவாய்மொழிப் பாசுரங்கள் அந்தாதி வகையைச் சேர்ந்தவை. அதாவது, ஒரு பாசுரத்தின் கடைச்சொல் கொண்டு அடுத்த பாசுரம் தொடங்கும். அந்த வகையில், இப்பாசுரத்திற்கு முந்தையதில் ஆழ்வார் "திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?" (தினம் ஒரு பாசுரம்-68 இடுகை) என்று உய்வடையும் நாள் பற்றிய ஐயத்தை எழுப்பியிருந்தார். இப்பாசுரத்திலும், "எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?"  என்று சந்தேகப்படினும் "மெய்ந் நான் எய்தி" என்று பரமபதத்திற்குத் தேவையான  தகுதியைத் தான் பெற அருளவேணுமாய் வேண்டிய பின்னரே திருவடி நிழல் தஞ்சம் புகுவது பற்றிச் சொல்கிறார், இல்லையா?

 


 மண்ணளந்த இணைத்தாமரைகள்

ஆழ்வார்கள்  வாமன அவதாரத்தை  மிக்க ஏற்றமாய் பாசுரங்களில் பாடியதற்கு, அதன் திருவடி உகந்த சம்பந்தமே காரணம் எனலாம்.  ராமானுஜரும் தனது "சரணாகதி கத்யத்தில்" "லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ (உலகமளந்த உன் திருவடிகளை உபாயமெனப் பற்றுவேன்)" என்ற  வடமொழிப் புராண தோத்திரத்தைச் சுட்டி  த்ரிவிக்ரமனின் திருவடிகளையே முன்னிறுத்துகிறார். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் தரலாம்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழி -
"குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன"

"திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே"

"மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கரு நிற மேக நியாயற்கு, கோலச் செந்தாமரைக் கண்ணற்கு "

"மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே"

"ஓரடியால் எல்லா உலகும் தட வந்த மாயோன்"

"ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே"

"தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ"

"ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை" (கள்ளழகர்  மங்களாசாசனம்)

ஆண்டாளின் திருப்பாவை -
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"

"அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே"

"அன்று  இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி"

திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தம் -
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே

திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி -
மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்

மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது  நம்மையாளும் அரசே

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்
"ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான்"

"பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை" 


 
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்- திருவேங்கடமுடையானின்  திருவடிகள் தேவர்களுக்கும் அரிதான செங்கமலத் திருவடிகள் என்று ஆழ்வார் அருளுகிறார். வானவர்களே, நிரந்தரமாக, திரள் திரளாக, அவனது திருவடிகளை தரிசிப்பதற்காக, பணிவன்புடன்  நின்று  தொழுகின்றனர் எனும்போது, மானுடர்க்கு வேறு புகழ் இல்லை என ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார். இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.   அதாவது, மானுட அடியார்களுக்கு (அர்ச்சாவதார) திருமலை உறை அண்ணலின் திருவடிகள், வானுலக மாந்தர் வணங்கும் பரமபத நாயகனின் திருவடித் தாமரைகளுக்கு ஒப்பானவை!

மெய்ந் நா மனத்தால் வழிபாடு - மனம், வாக்கு, காயம் என்று த்ரிகரணங்களாலும் வழிபடுதல் வேண்டும் என்பது ஆழ்வார் வாக்கு. அதுவே சரணாகதித்துவக் கோட்பாடு.  ஆழ்வார் "எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி" எனப் பாடி  இம்மூன்றுக்கும் பொருத்தமாக  3 வினைகளை (முறையே) அருமையாகக் கையாள்கிறார்.
மெய் --- நின்று
நா --- ஏத்தி
மனத்தால் --- இறைஞ்சி


அதனால் தான் "மனம் வாக்கு காயம்" பாசுரத்தில் "காயம் வாக்கு மனம்" என மாறி வருகிறது.  மெய் என்பது   உடலின் செயல்களைக் குறிக்கிறது: பணிதல், நோன்பிருத்தல் போன்றவை.   காயம் (உடல்) முதலில் வசப்பட வேண்டும் (ஐம்புலனடக்கம்) என்பதால் மெய் முதலில் சொல்லப்பட்டது என்று கொள்வதும் தகும். "மெய்யான  நம்பிக்கையுடன், பற்றுதலுடன், நாவினாலும், மனத்தினாலும் வழிபாடு செய்தல் வேண்டும்" என்றும் கொள்ளலாம்.

ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம் ஒன்றில் "தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" என்று  இம்மூன்றையும் நம்மாழ்வார் சொன்ன வரிசையிலேயே தான் பாடியிருக்கிறாள்.

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? - ஆழ்வார் " பரமனே! அடியேன் உண்மையைக் கண்டு கொண்டேன் . (ஆனால்)அதை முழுமையாக புரிந்து தெளியவல்ல அறிவை நீவிர் அருளி ஆட்கொள்ள வேண்டும்" என்று தன்னைக்  குறைத்து எண்ணிக் கொள்ளும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்!?

பொதுவாக  "மெய்" அல்லது "உண்மை" என்பதற்கு "பரந்தாமனே உபேயம் (இலக்கு), அவனே உபாயம் (அடையும் வழிவகை)" என்று பொருள்படும்.  "மெய்ந் நா மனத்தால்", "மெய்ந் நான் எய்தி" என்று ஆழ்வாரின் சொற்சித்தும் ரசிக்கத் தக்கது :-)

மேவுதல் - அழகான இச்சொல்லை பல பாசுரங்களில் காணலாம். இது 'வெறும் தங்குதல்' இல்லை, (திருவடியில்)"பொருந்தி அமைதல்". இது தவிர இச்சொல்லுக்கு "அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்;" என்று பல பொருள்கள் உண்டு.

ஆக, அர்ச்சாவதார கோல திருவேங்கடப் பெருமாளின்  திருவடிகளில் சரண்  அடைவது, அன்று உலகளந்த   திருவடிகளில் சரண் புகுவதற்கு ஈடானது என்பது ஆழ்வார் திருவாக்கு.  அதாவது, திருமலை ஸ்ரீனிவாசனின் திருவடித் தாமரைகள் அத்தகைய சௌலப்யமும் (எளிமை வாய்ந்த கருணை) சௌசீல்யமும் (பேதம் நோக்காத கருணை) மிக்கவை.

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா 

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

அமுதமான பாசுரத்துக்கு அழகான விளக்கம்.

இது அந்தாதின்னு சொல்லியிருக்கீங்க. இது எந்த வகை அந்தாதி? யமக அந்தாதியா? முதல் இரண்டு அடியிலும் தொடக்கம் ஒன்றி வருது. அடுத்த இரண்டு அடிகளின் தொடக்கம் ஒன்றி வருது. பொதுவா நான்கு அடிகளிலும் தொடக்கம் ஒன்றி வந்தால் அது யமக அந்தாதின்னு பாத்திருக்கேன். அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அந்தாதி முழுக்கவே யமக அந்தாதிதான். இப்படி இரண்டிரண்டு அடிகளாகப் பொருந்தி வந்தாலும் யமக அந்தாதியா?
By ஜி.ராகவன்
Note to ராகவன்: I accidentally deleted your tweet, republishing it from gmail.

Nagendra Bharathi said...

அருமை

said...

I was searching for pasurams related to Lord Vamana Moorthy. Very happy to read the pasuram lines related to Lord Vamana.

If possible can your please refer all the pasurams related to Lord Vamana in entire Nalayira Divyaprabandam.

Adiyen Ramanujadasyai

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails